
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் அறப்பணி இன்று வியாழக்கிழமை (14) மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இந்த நினைவேந்தல் வாரத்தின் ஒரு அங்கமாக இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயற்பாட்டாளர்களில் ஒருவரான இராமலிங்கம் சத்தியசீலன் தலைமையில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட பிரத்யேக இடத்தில் பொதுமக்களுக்கு கஞ்சி பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கஞ்சியினை வழங்கி வைத்தனர். அத்துடன் பெருமளவிலான பொதுமக்களும் வழிப்போக்கர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளையும் ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
