
கனடாவின் வாகனத் திருட்டு வலையமைப்பு முறியடிப்பு: இந்திய வம்சாவளியினர் உட்பட இரு பெரும் கும்பல்கள் கைது
கனடாவின் Ontario மாகாணத்தில் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பிரதான குற்றக் குழுக்களை Halton பிராந்திய காவல்துறை முறியடித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம், இந்திய வம்சாவளியினர் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெரும் திருட்டுச் சதித்திட்டங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
'Project Joker' என்ற பெயரிலான முதல் விசாரணையில், Quebec-ஐ தளமாகக் கொண்ட ஒரு குற்றக் குழுவின் உறுப்பினர்களான இருவர் அடையாளம் காணப்பட்டனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Bronte GO Station-இல் இருந்து ஒரு Lexus SUV திருடப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. சந்தேக நபர்களைத் தீவிரமாகக் கண்காணித்ததில், அவர்கள் Oakville மற்றும் Mississauga பகுதிகளில் வாகனங்களைத் திருடியது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, மே 22 அன்று Montreal-ஐச் சேர்ந்த 27 வயதான Dany Hamel-Poirier மற்றும் 20 வயதான Damian Daneau ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட Dany Hamel-Poirier, ஏற்கனவே Ontario மற்றும் Quebec மாகாணங்களில் Peel, Toronto, York மற்றும் Sûreté du Québec உட்பட பல்வேறு காவல்துறை பிரிவுகளால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது டஜன் கணக்கான வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த இருவரும் GTHA (Greater Toronto and Hamilton Area) பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வாகனத் திருட்டுகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று காவல்துறை நம்புகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த Halton பிராந்திய காவல்துறைத் தலைவர் Stephen Tanner, 'ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, பிணையில் உள்ள நபர்கள் 100-க்கும் மேற்பட்ட வாகனத் திருட்டுகளில் தொடர்புடையவர்களாக இருப்பது சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல். வாகனத் திருட்டு என்பது ஒரு சாதாரண சொத்துக் குற்றம் அல்ல, மாறாக இது நமது சமூகத்தின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளால் இயக்கப்படுகிறது' என்று எச்சரித்தார்.
'Project Disconnect' என்ற இரண்டாவது விசாரணையின் கீழ், Oakville ஹோட்டல்களில் அதிகரித்து வந்த வாகனத் திருட்டுகள் கண்காணிக்கப்பட்டன. மே 27 அன்று, ஹோட்டல் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வாகனத்தைத் திருட முயன்றபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 வயதான Jobanpreet Singh மற்றும் 26 வயதான Atish Singh ஆகிய இருவரையும் அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட Dodge Durango வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்ட Jobanpreet Singh, மாணவர் விசாவில் கனடாவில் தங்கியிருந்ததும், அவர் மீது Canada Border Services Agency (CBSA) சார்பில் ஏற்கெனவே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீப காலமாக கனடாவில் சர்வதேச மாணவர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள், இத்தகைய குற்றச் செயல்களில் சிக்குவது அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
