Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

இலங்கை - வியட்நாம் இடையே நேரடி விமான சேவை: இருதரப்பு உறவுகளில் புதிய மைல்கல்
Sri Lanka

இலங்கை - வியட்நாம் இடையே நேரடி விமான சேவை: இருதரப்பு உறவுகளில் புதிய மைல்கல்

By MadushanMay 8, 2026

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில், இவ்வருட இறுதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் அவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், "வியட்நாம் ஏர்லைன்ஸ்" நிறுவனம் இவ்வருடத்திற்குள் இலங்கைக்கான தனது நேரடி விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது. இந்த நேரடி விமான சேவை ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வர்த்தகத் தொடர்புகள் மற்றும் மக்கள் இடையிலான கலாசார பரிமாற்றங்களும் மேலும் விரிவடையும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார ரீதியாக இரு நாடுகளையும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பெறுமதியை வரும் 2030 ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். இதற்கான புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையுடனான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாம், அனைத்துத் துறைகளிலும் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்திய அவர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு வியட்நாம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான வியட்நாமின் இந்த ஒத்துழைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio