Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்தார் விஜய் – தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது தமிழக வெற்றிக் கழகம்
India

எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்தார் விஜய் – தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது தமிழக வெற்றிக் கழகம்

By MadushanMay 4, 2026

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 04) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தனது முதல் தேர்தலிலேயே வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்து அரசியல் அரங்கையே அதிரவைத்துள்ளது.

அரசியல் கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பல தசாப்த கால சாதனையை விஜய் தற்போது முறியடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1977-ம் ஆண்டு தனது முதல் சட்டசபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 30.4 சதவீத வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருந்தது. ஆனால், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் பகல் நேர நிலவரப்படி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 38 சதவீத வாக்குகளைப் பெற்று அந்த நீண்ட கால சாதனையைத் தகர்த்துள்ளது.

தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், சுமார் 104 முதல் 108 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகாலமாக தமிழக அரசியலில் கோலோச்சி வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் முன்னிலையில் உள்ளார்.

மறுபுறம், தமிழகத்தின் பிரதான கட்சிகளான ஆளுங்கட்சி திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டும் பல தொகுதிகளில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பின்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio