Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

அரசு அலுவலகங்களில் தவெகவினரின் அத்துமீறல் கடும் கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன் சாடல்!
India

அரசு அலுவலகங்களில் தவெகவினரின் அத்துமீறல் கடும் கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன் சாடல்!

By MadushanMay 20, 2026

அரசு அலுவலகங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) அத்துமீறிச் செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி என்ற பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் என்ற பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தவறு நடக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் தனி நிர்வாக அமைப்பு இருக்கும்போது, ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? என்ற கேள்வியையும் டிடிவி தினகரன் எழுப்பியுள்ளார். மேலும், முதல்வர் பதவி ஏற்பு விழாவின் போது, "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதல்வர் ஜோசப் விஜய், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சியினர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோசப் விஜய் முதல்வராகப் பதவி ஏற்றதிலிருந்து முதல்வரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர் என்றும் தினகரன் சாடியுள்ளார். ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதல்வர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து இன்ஸ்டா ரீல்ஸ்களாக (Insta Reels) எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும், தற்போதைய டிரெண்டாகவும் மாறியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, விளம்பரம் என்பது வேறு, மக்கள் பணி என்பது வேறு என்பதை முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு உடனடியாக உணர்த்த வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார். அதோடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது பதிவின் மூலம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio