Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

மயிலத்தமடு-மாதவனை போராட்டம்: இன அரசியல், நில அபகரிப்பை அம்பலப்படுத்தும் ஆவண நூல் வெளியீடு
Sri Lanka

மயிலத்தமடு-மாதவனை போராட்டம்: இன அரசியல், நில அபகரிப்பை அம்பலப்படுத்தும் ஆவண நூல் வெளியீடு

By MadushanJune 15, 2026

மட்டக்களப்பு, மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் முன்னெடுத்துள்ள அறவழிப் போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள நிலையில், அதன் வரலாற்றுப் பின்னணி, இன அரசியல் மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை ஆவணப்படுத்தும் முக்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் வை. ஜெயமுருகன் எழுதிய 'மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்' எனும் தலைப்பிலான இந்நூல், எழுநா வெளியீடாக போராட்டக் களமாகிய சித்தாண்டி பந்தலில் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நில அபகரிப்பினால் ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதையும், இதன் பின்னணியில் உள்ள இன அரசியல் குறித்தும் இந்நூல் ஆழமாக ஆராய்வதாக நூல் ஆய்வுரையை நிகழ்த்திய க. குருநாதன் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் அறிமுகவுரையாற்றிய சார்ள்ஸ் அன்ரனிதாஸ், இந்நூல் வெறும் பதிவாக அன்றி, எதிர்கால சந்ததியினருக்கான வரலாற்று ஆவணமாகவும், உரிமைப் போராட்டத்திற்கான கருத்தியல் ஆயுதமாகவும் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். ஆயிரம் நாட்களைக் கடந்தும் தொடரும் ஒரு போராட்டத்தின் குரலை எழுத்து வடிவில் பதிவு செய்துள்ளமையானது, இப்பிரச்சினைக்கு தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio