
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரானின் டிரோன் தாக்குதல்: ‘அயர்ன் பீம்’ லேசர் ஆயுதத்தை வழங்கி இஸ்ரேல் அதிரடி உதவி
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய இடங்களைக் குறிவைத்து ஈரான் பாரிய தாக்குதலை முன்னெடுத்தது. இந்தத் தாக்குதலில் சுமார் 500 ஏவுகணைகள் மற்றும் 2,000 டிரோன்கள் ஏவப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் அமீரகத்தின் சில பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தின.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அரணை பலப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் ஏற்கனவே 'அயர்ன் டோம்' (Iron Dome) எனப்படும் பாதுகாப்பு அமைப்புகளையும், அவற்றை இயக்கத் தேவையான ராணுவ வீரர்களையும் அங்கு அனுப்பியிருந்தது. தற்போது ஈரானின் டிரோன் தாக்குதல்களை இன்னும் துல்லியமாக எதிர்கொள்ள, இஸ்ரேல் புதிதாக உருவாக்கியுள்ள ‘அயர்ன் பீம்’ (Iron Beam) என்ற நவீன லேசர் ஆயுதத்தையும் அமீரகத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ஆயுதத்தில் உள்ள சக்திவாய்ந்த லேசர் கற்றைகள், எதிரிகளின் டிரோன்களை நடுவானிலேயே பொசுக்கிச் சாம்பலாக்கும் திறன் கொண்டவை.
இதுமட்டுமின்றி, வான்வழிக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த ‘ஸ்பெக்ட்ரா’ (Spectra) எனப்படும் அதிநவீன கண்காணிப்புக் கருவியையும் அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது. இந்தக் கருவி, ஈரானின் டிரோன்கள் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் வரும்போதே அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும். இதன் மூலம், ‘அயர்ன் பீம்’ ஆயுதங்களைப் பயன்படுத்தி டிரோன்கள் இலக்கை அடைவதற்கு முன்னரே அவற்றை முழுமையாக அழித்துவிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
