Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
India

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

By MadushanMay 12, 2026

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சென்னையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். குறிப்பாக, சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர் விஜய், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதல்வர் விஜய்யை வாசலுக்கே வந்து உற்சாகமாக வரவேற்ற திருமாவளவன், அவருக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, திருமாவளவனுக்குப் பொன்னாடை போர்த்திய முதல்வர் விஜய், அவரிடம் ஆசி பெற்றார். இருவரும் சிறிது நேரம் அரசியல் நிலவரங்கள் குறித்து உரையாடிய நிலையில், திருமாவளவன் இந்திய அரசியலமைப்பின் முகப்புரை (Preamble) பிரதியை முதல்வர் விஜய்க்குப் பரிசாக வழங்கினார்.

முன்னதாக, சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்தார். அங்கு கட்சியின் தலைவர் காதர் மொய்தீனைச் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பின்போது ஐயூஎம்எல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் உடனிருந்தனர். முதல்வரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தொடர்ந்து, அதிமுகவில் தனி அணியாகச் செயல்படும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கும் முதல்வர் விஜய் இன்று சென்றார். அங்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், இரா. காமராஜ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஒரே நாளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை முதல்வர் சந்தித்துப் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio