
இலங்கை - பாகிஸ்தான் உறவை வலுப்படுத்த இணக்கம்: மத்திய கிழக்கு அமைதி முயற்சியில் பாகிஸ்தானின் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நஸீர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை (30) அலரி மாளிகையில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீள உறுதிப்படுத்தும் வகையில் இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு அமைந்திருந்தது.
இந்தக் கலந்துரையாடலின் போது, 'டித்வா' சூறாவளி அனர்த்தத்தைத் தொடர்ந்து இலங்கையின் மீட்சிப் பணிகளுக்காக பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய உடனடி மற்றும் தாராளமான ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆழமான உறவை வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது உறுதிபூண்டனர்.
மேலும், கல்வி, பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் கலாசாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்தல் மற்றும் பிராந்திய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் இணைந்து செயலாற்றுவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் தலைவர்கள் ஆலோசித்தனர்.
இச்சந்திப்பின் ஒரு முக்கிய அம்சமாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் குறைப்பதற்காக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அங்கு நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில், ஒரு நடுநிலை மத்தியஸ்தராக பாகிஸ்தான் ஆற்றி வரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை பிரதமர் ஹரிணி அமரசூரிய வெகுவாகப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
