
மலையக மக்களின் காணிப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடித் தீர்வு காண வேண்டும்: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் தற்போது முழுமையாக மறந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மலையக தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால காணிப் பிரச்சினைக்கு முறையான தீர்வை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் மலையக மக்களுக்குத் தாராளமாக வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, நடைமுறையில் அவர்களைக் கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கு உதாரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டமொன்றில் வசிப்பதற்கு இடமில்லாத மலையகப் பிரஜை ஒருவர் அமைத்த சிறிய கூடாரத்தை, தோட்டப் பாதுகாவலர்கள் அராஜகமான முறையில் அகற்றி அவரை விரட்டியடித்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார். லயன் அறைகளில் மிக மோசமான சூழலில் வாழும் இம்மக்கள், நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் பெரும் பங்காற்றுகின்றனர் என்பதை அரசாங்கம் உணர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மலையக மக்கள் மற்றும் நிலமற்ற இளைஞர்களுக்குப் புதிய வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுக்கப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்தார். தரிசு நிலங்களை அபிவிருத்தி செய்து, அவர்களைச் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் சமூக உடன்படிக்கையைத் தாம் நடைமுறைப்படுத்தப் போவதாக அவர் தெரிவித்தார். வீடற்ற மக்கள் தற்காலிகமாகக்கூட ஓரிடத்தில் வசிக்க முடியாத நிலையை மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவர்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் நினைவுறுத்தினார்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளுக்கும் பலவீனங்களுக்கும் ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை என அவர் விமர்சித்தார். சிறு நன்மைகள் நடந்தால் அதைக் கொண்டாடும் அரசாங்கம், தவறுகள் நடக்கும்போது அதன் பழியை அதிகாரிகள் மீது சுமத்திவிட்டுத் தப்பித்துக்கொள்வதாகக் கூறினார். குறிப்பாக, தகுதியற்ற அரசியல் ஆதரவாளர்களை அரச சேவையில் அமர்த்துவதால் நிர்வாகக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 2.5 மில்லியன் டொலர் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு இந்த அரசியல் மயமாக்கலே காரணம் என்றார். அரச சேவையாளர்கள் எக்காரணம் கொண்டும் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியக்கூடாது எனவும், தூய்மையான அரச சேவையைப் பாதுகாக்கத் தாம் முன்னிற்போம் எனவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
