Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

இலங்கையின் அரச வைத்தியசாலைகளை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த ரஷ்யா ஆதரவு: ரஷ்ய சுகாதார அமைச்சர் உறுதி
Sri Lanka

இலங்கையின் அரச வைத்தியசாலைகளை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த ரஷ்யா ஆதரவு: ரஷ்ய சுகாதார அமைச்சர் உறுதி

By MadushanMay 5, 2026

இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வலுப்படுத்துவதற்கு ரஷ்யக் குடியரசு விசேட அவதானம் செலுத்தும் என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர், நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, ரஷ்ய சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த திங்கட்கிழமை (04) கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். முன்னதாக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பைத் தொடர்ந்தே இந்த விஜயம் அமைந்திருந்தது.

தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விபத்துப் பிரிவு ஆகியவற்றை ரஷ்யக் குழுவினர் பார்வையிட்டனர். இதன்போது, அங்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முறைகள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். அத்துடன், வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளையும் அவர்கள் முன்னெடுத்தனர்.

இலங்கையில் அமுலிலுள்ள இலவச சுகாதாரச் சேவையின் தரத்தைப் பாராட்டிய அமைச்சர் மிஹைல் முராஷ்கோ, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும், மருத்துவத் துறை சார்ந்த அறிவுப் பகிர்வையும் இத்தகைய விஜயங்கள் மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டார். நவீன தொழில்நுட்ப வசதிகளை இலங்கை வைத்தியசாலைகளில் புகுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு, இந்தச் சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Boom Tamil
Live NowBoom Tamil Radio