
மட்டக்களப்பில் 11 வயது சிறுமிக்கு கரண்டியால் சூடு வைத்த தாய் கைது - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் 11 வயதுடைய சிறுமி ஒருவருக்கு இரும்பு கரண்டியால் சூடு வைத்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த அவரது தாயாரை நேற்று (05) செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி, கணேசபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி சித்திரவதைக்குள்ளாவதாக பொலிஸ் அவசர சேவை இலக்கத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலையடுத்து, நேற்றிரவு குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின் போது, வீட்டில் இருந்த 11 வயது சிறுமி மீது அவரது தாயார் இரும்பு கரண்டியை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி, அவரது கைகளில் வைத்து சூடு ஏற்றி சித்திரவதை செய்தமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட அந்தத் தாயாரை பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தாயாரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
