Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

அமெரிக்கா: நடுவானில் கோளாறு - கடலில் விழுந்த விமானத்தில் இருந்த 11 பேர் அதிரடியாக மீட்பு!
World

அமெரிக்கா: நடுவானில் கோளாறு - கடலில் விழுந்த விமானத்தில் இருந்த 11 பேர் அதிரடியாக மீட்பு!

By MadushanMay 14, 2026

அமெரிக்காவின் மத்திய ஃப்ளோரிடா கடற்பகுதியில் விபத்துக்குள்ளான தனியார் விமானத்தில் பயணித்த 11 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானம் கடலில் விழுந்த நிலையில், நடுக்கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரையும் உயிர் காக்கும் படகுகள் மூலம் காப்பாற்றிவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவற்படையினர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹாமாஸிலிருந்து புறப்பட்ட இந்த இரட்டை எஞ்ஜின் விமானம், ஃப்ளோரிடாவின் மெல்போர்ன் பகுதியிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் கடலில் விழுந்ததையடுத்து, கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களுக்குத் தேவையான மேலதிக உயிர் காக்கும் மிதவைகளை மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டரிலிருந்து வழங்கியதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, நீர் போன்றவற்றையும் கொடுத்து உதவியுள்ளனர்.

பல மணிநேர முயற்சிக்குப் பின்னர், அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவற்படையினர் விமானத்தில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சுமார் ஐந்து மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு, ஹெலிகொப்டர் மூலம் அனைவரும் மீட்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மீட்கப்பட்ட 11 பேரும் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக மெல்போர்ன் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விமானத்தின் எஞ்ஜினில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக பஹாமாஸ் அதிகாரிகள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அனைவரையும் துரிதமாகச் செயல்பட்டு மீட்ட மீட்புக் குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Boom Tamil
Live NowBoom Tamil Radio