Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி: மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆதிக்கம் வீழ்ந்தது
India

மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி: மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆதிக்கம் வீழ்ந்தது

By MadushanMay 4, 2026

மேற்கு வங்க மாநில அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாநிலத்தின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சியைப் பிடிக்கிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் சுமார் 200 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான 92.47 சதவீத வாக்குகளின் அடிப்படையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஃபால்டா தொகுதியில் முறைகேடு புகார்கள் எழுந்ததால் அங்கு மட்டும் மே 21-ம் தேதி மறுதேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 148 இடங்களைக் கடந்து பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் 80-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

இத்தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் பழைய ஆளுமைமிக்க கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு 17 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸும், 33 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் இம்முறை ஒற்றை இலக்க இடங்களிலேயே சுருங்கியுள்ளன. இரு கட்சிகளும் தலா 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன. அதே சமயம், பாஜக 45 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளையும், திரிணமூல் காங்கிரஸ் 40 சதவீத வாக்குகளையும் பெற்று மாநில அரசியலில் இருமுனைப் போட்டியை உறுதி செய்துள்ளன.

மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் சுவேந்து அதிகாரியின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காங்கிரஸில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, பின்னர் மம்தாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பணியாற்றிய சுவேந்து, 2020-ல் பாஜகவில் இணைந்தார். 2021 தேர்தலிலேயே மம்தாவை நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்து கவனம் ஈர்த்த அவர், இம்முறையும் நந்திகிராமில் முன்னிலை வகித்து வருகிறார். இருப்பினும், மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் சுவேந்து அதிகாரி முதலமைச்சராகத் தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், தேர்தல் களத்தில் முதல்வர் வேட்பாளரை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால், திலீப் கோஷ், அக்னிமித்ரா பால் மற்றும் மாநிலத் தலைவர் ஷமிக் பட்டாச்சார்யா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் நடைபெறவுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio