Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்: தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதியையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி பிரகடனம்!
Sri Lanka

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்: தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதியையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி பிரகடனம்!

By MadushanMay 18, 2026

தமிழ் இன அழிப்புக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வலியுறுத்துவதோடு, தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒருபோதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் பிரகடனத்தில் மிக வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழின அழிப்பிற்கு எதிரான தேசிய எழுச்சி நாளான மே 18 அன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு (வடக்கு - கிழக்கு) அமைப்பினால் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பிரகடனத்திலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு அதன் உச்சத்தைத் தொட்டு 17 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த இன அழிப்புச் செயல்முறையானது ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட நீண்ட வரலாற்றுப் பரிமாணத்தைக் கொண்டதாகும் என பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பேரரசு கட்டமைப்பின் புவிசார் நலன்களுக்காகவும், சிங்கள பௌத்த பேரினவாத ஏகாதிபத்தியத்தைத் தக்கவைப்பதற்காகவும், ஈழத்தமிழர்களின் கூட்டு அரசியல் வேட்கையையும் அதன் ஆயுதப் பரிமாணத்தையும் ஓர் இனப்படுகொலை ஊடாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகக் கூறப்படும் மாயையை, ஆண்டுதோறும் முள்ளிவாய்க்காலில் நிகழும் தமிழினப்படுகொலை நினைவேந்தல் எழுச்சி தகர்த்து எறிகிறது. 17 ஆண்டுகள் கடந்தும், இம்மண்ணிலே கொத்துக் கொத்தாய்க் கொல்லப்பட்ட எமது இரத்த சொந்தங்களுக்கு நினைவு நடுகற்கள் கூட இன்றி, ஆகாயமே எல்லையாக, அவர்களின் கனவுகளைச் சுமந்து வரும் காற்றே சாட்சியாக, இந்த இரத்தம் தோய்ந்த மண்ணில் தேசத்திற்கான கனவுகளுடன் மக்கள் ஒன்று கூடியுள்ளனர். அடக்குமுறையை எதிர்த்து, விடுதலைப் பயணத்தைக் கூட்டாகத் தொடர ஒரு தேசமாக முள்ளிவாய்க்கால் திடலில் மக்கள் திரண்டுள்ளதோடு, எமது கூட்டு அரசியல் கோரிக்கைகள் நியாயமானவை, அறத்தின் பால்பட்டவை என்பதும், இவை இன்னொரு கூட்டுச் சமூகத்தின் தனி இருப்பை எவ்விதத்திலும் அச்சத்திற்கு உள்ளாக்கவில்லை என்பதும் இங்கு மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் தமிழ் தேசிய நம்பிக்கை மீதான போரை சிங்கள அரசும் துருவப் பேரரசு கட்டமைப்பும் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. தமிழ் தேசிய நம்பிக்கை என்பது ஈழத் தமிழினத்தின் ஆத்மா ஆகும். அந்தத் தமிழ் தேசிய கூட்டு உளவியலின் ஆத்மாதான் எங்களது கூட்டுத்திறாணி என்பதால், இதனை வலுப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை என்றுமில்லாதவாறு இன்று எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. நமக்குள்ள மிகப்பெரிய ஆயுதமாக விரிந்து கிடப்பது தமிழ் தேசிய நினைவு தினமாகும். நாம் எமது வரலாற்றை நினைவு கூரும் வரை நம்மை யாராலும் அழித்துவிட முடியாது. கழிந்த காலம் நமக்கான எதிர்காலத்தை வடிவமைக்க உதவுகின்றது. தற்போதைய வரலாற்றுக் காலம் என்பது பண்பாட்டு மீள் எழுச்சிக்கான காலமாகும். ஈழத் தமிழினம் தனக்கான வரலாற்று வேர்களைத் தேடிப் பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும். இந்த பண்பாட்டு மீள் எழுச்சியே ஈழத் தமிழினத்திற்கான தனித்துவமான அடையாளத்தைச் செதுக்குகின்றது. முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளமாகும். தமிழின அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூறுவது என்பது, மீண்டும் இந்த இனத்தின் எழுச்சியையே சுட்டி நிற்கிறது. சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், சிங்கள ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைத் தனது புவிசார் நலன்களுக்காகத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசு கட்டமைப்பின் அடக்குமுறைக்கு எதிராகவும், ஈழத் தமிழினமாகப் போராட அணிதிரள்வதைத் தவிர வேறு எவ்வித தெரிவும் தமிழர்களுக்கு முன்னால் வைக்கப்படவில்லை.

இரத்தம் தோய்ந்த இம்மண்ணிலிருந்து போராடக் கனத்த காற்றைச் சுமந்து வரும் மாண்டவர்களின் நினைவுகளின் மீதும், நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கையின் மீதும் சபதம் ஏற்று இந்த பிரகடனத்தில் ஐந்து முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, சிங்கள பௌத்தமயமாக்கப்பட்டு வரும் தமிழ் தாயகத்தைத் தடுக்கவும், தமிழ் தேசியத்தை எமது நாளாந்த வாழ்வியலாக்கவும் தொடர்ந்து செயலாற்றுவது என உறுதிபூணப்பட்டுள்ளது. இரண்டாவதாக, தொடரும் தமிழ் இன அழிப்பில் சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அரச பொறுப்பையும் மேற்குலக நாடுகளின் உடந்தை தன்மையையும் உலகிற்கு வலியுறுத்தி, குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த அழுத்தம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒருபோதும் கைவிட முடியாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என சர்வதேசத்தை வலியுறுத்த பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நான்காவதாக, கூட்டு ஈழத் தமிழர் இருப்பின் மீது தற்போதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு முறைகளைத் தடுத்து நிறுத்துவது என்றும், இறுதியாக, தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதிப்பாட்டைக் கொண்டு, ஒரே குடையின் கீழ் தமிழின அடக்குமுறைக்கு எதிராக, தமிழின விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட, எமது மக்கள் பலத்தை நம்பி, எவ்வித சக்திகளுக்கும் அடிபணியாது தொடர்ந்து போராடுவோம் என்றும் அந்தப் பிரகடனத்தில் ஏகமனதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio