Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

முள்ளிவாய்க்கால் மே-18 இனப்படுகொலை நினைவேந்தல்: யாழ். நல்லூரில் ஊர்திப் பவனி உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்
Sri Lanka

முள்ளிவாய்க்கால் மே-18 இனப்படுகொலை நினைவேந்தல்: யாழ். நல்லூரில் ஊர்திப் பவனி உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

By MadushanMay 12, 2026

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, நீதி கோரிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் ஒரு அங்கமாக முன்னெடுக்கப்படும் நினைவு ஊர்திப் பவனி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) காலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்து உணர்வுப்பூர்வமாகத் தொடங்கியது. தாயக மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து, இந்த ஊர்திப் பவனி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நினைவு ஊர்தியானது எதிர்வரும் மே மாதம் 18-ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையும் வகையில் தனது பயணத்தை திட்டமிட்டுள்ளது. இன்று நல்லூரில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் ஊடாகப் பயணிக்கவுள்ளது. ஒவ்வொரு பிரதேசத்திலும் அந்தந்த பகுதி மக்களுடன் இணைந்து இனப்படுகொலைக்கு நீதி கோரியும், உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தும் பல்வேறு உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த ஆரம்ப நிகழ்வின் சிறப்பம்சமாக, தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டது. இறுதிப் போர்க்காலத்தில் உணவின்றி தவித்த மக்களுக்கு உயிர்காக்கும் உணவாக அமைந்த இந்தக் கஞ்சியினை உண்டு, அன்றைய கால துயரங்களை மக்கள் மௌனமாக நினைவு கூர்ந்தனர். இந்த ஊர்திப் பவனியானது தமிழினத்தின் உரிமைப் போராட்ட வரலாற்றையும், சந்தித்த பேரவலங்களையும் இளைய தலைமுறைக்கு கடத்தும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio