Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

தெமட்டகொடையில் பெரும் ஆயுதக் கிடங்கு முறியடிப்பு: 19 டி-56 துப்பாக்கிகள், இலட்சக்கணக்கான போதை மாத்திரைகள் மீட்பு!
Sri Lanka

தெமட்டகொடையில் பெரும் ஆயுதக் கிடங்கு முறியடிப்பு: 19 டி-56 துப்பாக்கிகள், இலட்சக்கணக்கான போதை மாத்திரைகள் மீட்பு!

By MadushanJune 5, 2026

கொழும்பு, தெமட்டகொட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் ஆயுதக் கிடங்கொன்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட நுட்பமான புலனாய்வு விசாரணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின்போது, 19 டி-56 ரக துப்பாக்கிகளும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களில் 19 டி-56 ரக துப்பாக்கிகள், அவற்றுக்கான ரவைகள், 15 கிராமுக்கு மேற்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமான 100,400 'பிரிகேப்ளின்' மாத்திரைகள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின் மூலம், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வந்த பாரிய ஆயுத மற்றும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பு ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கைதுகளும் விசாரணைகளுமே இந்த மாபெரும் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளன. மே 12ஆம் திகதி ராகம பகுதியிலும், மே 18ஆம் திகதி பேலியகொட பகுதியிலும் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மே 22ஆம் திகதி தெமட்டகொடையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 45 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், 7 கிலோகிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்தே, இந்த வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

நீண்ட தேடுதலின் பின்னர், இந்தக் கடத்தல் வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்ட பிரதான சந்தேகநபர், நெலுவ பகுதியில் பெண் ஒருவருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, இந்த கடத்தலில் மாத்தறைப் பகுதிக்குள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, மாத்தறை, சுல்தானாகொட பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழுவினர், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர். மேலும், மாத்தறைக்கான போதைப்பொருள் விநியோகத்தின் பிரதான கடத்தல்காரர் ஏற்கனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

நெலுவ பகுதியில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் முடிவிலேயே, தெமட்டகொடையில் உள்ள இரகசியக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. இந்தக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் எத்தகைய குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தன என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio