Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை அழித்தது உக்ரைன்: அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு
World

ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை அழித்தது உக்ரைன்: அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு

By MadushanMay 5, 2026

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. தற்போது நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் இந்தப் போரில், இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவின் பொருளாதார மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டமைப்பைச் சிதைக்கும் நோக்கில் உக்ரைன் ராணுவம் புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்யாவின் எரிபொருள் நெட்வொர்க்கை முடக்குவதில் உக்ரைன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற இரண்டு முக்கியமான "நிழல்" எண்ணெய் கப்பல்கள் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலானது ரஷ்யாவின் நோவோராசியிக் துறைமுகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்த ஜெலன்ஸ்கி, தரை, வான் மற்றும் கடல் வழியாகத் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகள் இனிவரும் நாட்களிலும் தொடரும் என எச்சரித்துள்ளார். இந்த எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்டதன் மூலம் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வருவாய் ஈட்டும் திறன் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் இந்தத் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் லெனின்கிரேட் உள்ளிட்ட 15 பிராந்தியங்களை இலக்கு வைத்து உக்ரைன் ஏவிய 334 ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவங்களில் ரஷ்ய தரப்பில் உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio