
கோவைக்கு 2 அமைச்சர் பதவிகள்: தவெகவின் அசுர வெற்றிக்கு விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக 108 இடங்களை பிடித்து, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சி அமைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்றுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் கோவை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 தொகுதிகளில், 6 தொகுதிகளை தவெக அள்ளியதற்குப் பரிசாகவே இந்த இரட்டை ஜாக்பாட் கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த கால தேர்தல்களில் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்று வந்ததால், கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகவே சித்தரிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை தவெக அந்தப் பிம்பத்தை உடைத்து பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கட்சித் தலைவர் நடிகர் விஜய் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்யாமலேயே, கோவை மக்கள் தவெகவிற்குப் பெரும் வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். இதற்குப் பரிசாகவே கோவைக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை வழங்கி விஜய் உற்சாகப்படுத்தியுள்ளார் என உள்ளூர் தவெகவினர் சிலாகிக்கின்றனர்.
புதிய அமைச்சர்களின் பின்னணி மற்றும் துறைகள்
கோவையில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற 2 இளம் முகங்களுக்கு இந்த அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவருமே பல ஆண்டுகாலமாக நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்து, பின்னர் தவெக தொண்டர்களாக மாறி, தற்போது எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களாக உயர்ந்துள்ளனர்.
அமைச்சர் கே. விக்னேஷ் (38): கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டதாரியான இவர், விஜய் மக்கள் இயக்கத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது தவெகவின் கோவை மாவட்ட செயலாளராக இருக்கும் விக்னேஷ், இதற்கு முன்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கீர்த்திகா என்ற மனைவியும், வெண்பா, யாழ்நிலா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
அமைச்சர் சம்பத்குமார் (47): கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பி.ஏ. பயின்ற இவர், விஜய் மக்கள் இயக்கத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய மூத்த நிர்வாகி ஆவார். தமிழக வெற்றிக் கழகம் உருவானதும் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சம்பத்குமார், நெய் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், இஷ்வா என்ற மகனும், ஸ்ரீ வீரஜெய்ஷ்ணவி என்ற மகளும் உள்ளனர்.
அரசியல் முக்கியத்துவம்:
கோவைக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் மற்றொரு அரசியல் பேச்சும் உலா வருகிறது. அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள விக்னேஷ் மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவருமே, தவெகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் என்.ஆனந்தின் தீவிர ஆதரவாளர்கள் என்று அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். எது எப்படியோ, கொங்கு மண்டலத்தில் தவெகவை பலப்படுத்தவே இந்த அதிரடி ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
