
ஐபிஎல் 2026: வாழ்வா - சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தில், தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இரு அணிகளும் தங்களது கௌரவத்தை நிலைநாட்டப் போராடவுள்ளன. குறிப்பாக, பிளே ஆஃப் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ள மும்பை அணி, சொந்த மண்ணில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் நீடிக்கிறது. அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ளது. பாண்டியா பேட்டிங்கில் 146 ரன்களும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்துள்ள நிலையில், அவரது தலைமைப் பண்பு குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிலையும் மோசமாகவே உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி 6 தோல்விகளைச் சந்தித்துள்ள அந்த அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால், இன்று உட்பட எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. பந்துவீச்சாளர்கள் ஓரளவு கைகொடுத்தாலும், பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் லக்னோ அணிக்குத் தொடர் சரிவைத் தந்து வருகிறது.
சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோஷின் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினாலும், சூப்பர் ஓவரில் நிக்கோலஸ் பூரன் சொதப்பியதால் லக்னோ தோல்வியைத் தழுவியது. கேப்டன் ரிஷப் பந்த் தனது பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சவாலையும் எதிர்கொண்டுள்ளார். அடுத்த ஒரு வாரத்தில் மூன்று முக்கியப் போட்டிகள் காத்திருக்கும் நிலையில், இன்றைய வெற்றி இரு அணிகளுக்குமே மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
