
இந்தியா - இத்தாலி இடையே 2029-க்குள் €20 பில்லியன் வர்த்தக இலக்கு: பிரதமர் மோடி - ஜார்ஜியா மெலோனி கூட்டறிக்கை
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இத்தாலி தலைநகர் ரோமுக்குச் சென்றார். இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் இணைந்து இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த முக்கிய கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, விண்வெளி, தூய்மையான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், மருந்துகள், ஜவுளி, உணவுதானியங்கள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு தீவிரமாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 2029-ம் ஆண்டுக்குள் இத்தாலி மற்றும் இந்தியா இடையே 20 பில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தக இலக்கை அடைய இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
உற்பத்தியில் இணையும் இரு நாடுகள்
உலகளவில் மிகச்சிறந்த அடையாளமாக விளங்கும் ‘‘இத்தாலியில் தயாரிக்கப்பட்டது’’ (Made in Italy) என்ற பெருமையுடன், தற்போது இந்தியாவின் ‘‘இந்தியாவில் உற்பத்தி செய்தல்’’ (Make in India) என்ற முன்முயற்சி இணைகிறது என்று தலைவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் உற்பத்தித் துறையில் இத்தாலிய வணிகங்களின் ஆர்வம் அதிகரித்து வரும் அதே வேளையில், இத்தாலியின் உற்பத்தித் துறையில் 1000-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் தங்களது தடத்தைப் பதித்துள்ளன. இது இரு நாடுகளின் விநியோகச் சங்கிலிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் ஒரு நேர்மறையான அறிகுறியாகும் என்றும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார வழித்தடமும் கலாச்சார பிணைப்பும்
இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) மூலம் நவீன போக்குவரத்து, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நெட்வொர்க்குகள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் பெருமளவில் மேம்படும் என்று இரு நாட்டு பிரதமர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தொலைநோக்கு திட்டத்தை நனவாக்க இந்தியாவும், இத்தாலியும் இதர ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து கூட்டாகச் செயல்படும். நாடுகளுக்கு இடையேயான ஆழமான கூட்டாண்மை மற்றும் நீடித்த கலாச்சாரப் பிணைப்புகளைப் பயன்படுத்தி, பொதுவான சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"இந்தியக் கலாச்சாரத்தில் 'தர்மம்' எனும் கருத்துரு எங்களது செயல்களுக்கு வழிகாட்டுகிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட டிஜிட்டல் யுகத்தில், ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற இந்தியாவின் கொள்கை வலிமையாக எதிரொலிக்கிறது. இத்தகைய மாண்புகள், மறுமலர்ச்சிக் காலத்தில் வேரூன்றிய இத்தாலியின் மனிதநேயப் பாரம்பரியத்தில் இயல்பாகவே பிரதிபலிக்கின்றன."
மக்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் கலாச்சாரத்தின் ஆற்றலை இந்த இருநாட்டுப் பண்புகளும் எடுத்துக்காட்டுகின்றன. எனவே, இரு நாடுகளின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை, மக்களை மையமாகக் கொண்டு, ஒரு வலிமையான மற்றும் முற்போக்கான இந்திய-இத்தாலி கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் என்று அந்த கூட்டறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
