Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 21 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்
World

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 21 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்

By MadushanMay 5, 2026

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 61 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லியுயாங் நகரில் உள்ள 'ஹுவாஷெங்' பட்டாசு தொழிற்சாலையில் திங்கட்கிழமை (04) மாலை 4:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிவிபத்தின் தாக்கம் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு உணரப்பட்டுள்ளதோடு, விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 3 கிலோ மீற்றர் தூரத்திற்குள் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக சுமார் 500 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சாலைக்குள் எஞ்சியுள்ள வெடிபொருட்கள் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருந்ததால், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கண்டறிய அதிநவீன ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இரண்டாம் கட்ட விபத்துகளைத் தவிர்க்க அப்பகுதி முழுவதும் ஈரப்பதமாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்தின் வீரியத்தால் தொழிற்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறியுள்ளன. "எங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல் சட்டங்கள் வெப்பத்தால் உருக்குலைந்துவிட்டன," என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் பறந்து வந்த இடிபாடுகள் தாக்கியதில் பலத்த எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கவும், காணாமல் போனவர்களைத் தேடும் பணியை முடுக்கிவிடவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகிலேயே அதிகளவில் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் கேந்திர நிலையமாக லியுயாங் நகரம் திகழ்கின்ற போதிலும், சீனாவில் இத்தகைய பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதம் ஹூபெய் மாகாணத்தில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விபத்து நடந்த தொழிற்சாலையின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio