
இலங்கையில் பாரிய இணையவழி மோசடி முறியடிப்பு: 221 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி, சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து பாரிய அளவிலான இணையவழி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 221 வெளிநாட்டவர்கள் காலி மற்றும் மிதிகம உள்ளிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 192 பேர் இந்தியப் பிரஜைகள் எனவும், ஏனைய 29 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தெற்குப் பகுதியில் கடந்த 11ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களிடமிருந்து இணையவழி மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஏராளமான மடிக்கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகல்ல மற்றும் சம்போதி சந்தி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 19 இந்தியர்கள் மற்றும் 4 நேபாளிகள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்ட இவர்களிடம் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிங்வத்த பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த 28 இந்தியர்கள் மற்றும் 5 நேபாளிகள் என 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை, சுற்றுலா விசா மூலம் தொழில் புரிந்தமை மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உயர் ரக வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹிக்கடுவ, தொட்டந்துவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் 35 இந்தியர்கள் மற்றும் 20 நேபாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தங்குமிடத்தின் உரிமையாளரான 43 வயதுடைய நபரொருவரும் பிடிபட்டுள்ளார். இதன்போது 25 கணினிகள், 119 கையடக்கத் தொலைபேசிகள், 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் பொலிஸ் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
மேலும், காலி, கல்வடுகொட மற்றும் ஸ்ரீ சுமேத மாவத்தை ஆகிய பகுதிகளில் உள்ள தங்குமிடங்களில் 110 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு, சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வருகை தந்து சட்டவிரோதமாக தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 58 கணினிகள் மற்றும் 79 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பாரிய மோசடி வலைப்பின்னல் தொடர்பாக காலி மற்றும் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
