
நாசிக் டிசிஎஸ் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி: 25 நாட்களாகத் தலைமறைவாக இருந்த நீடா கான் கைது!
நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பிபிஓ பிரிவில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு முயன்றது தொடர்பான வழக்கில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நீடா கான் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 25 நாட்களாகத் தலைமறைவாக இருந்த இவரை, நாசிக் காவல்துறையினரின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தீவிரத் தேடலுக்குப் பின் சத்ரபதி சம்பாஜி நகரில் வைத்துப் பிடித்துள்ளது.
நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் 18 முதல் 25 வயதுடைய இளம் பெண் ஊழியர்களுக்கு, அங்கிருந்த சில மூத்த அதிகாரிகள் மற்றும் குழுத் தலைவர்கள் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், மத ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் கடந்த மாதம் புகார்கள் வெடித்தன. இந்த விவகாரத்தில் நீடா கான் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வந்தபோது அவர்களைத் தடுத்ததுடன், அவர்களைக் கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணியச் சொன்னது மற்றும் மதமாற்றத்திற்குத் தூண்டியது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மற்ற நபர்களுக்கு அவர் உடந்தையாகச் செயல்பட்டதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் சர்வதேசத் தொடர்புகள் இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மதமாற்ற முயற்சிக்கும் மாலேகான் மற்றும் மலேசியா போன்ற இடங்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை மதமாற்றம் செய்யத் திட்டமிட்டனரா என்ற கோணத்தில் எஸ்ஐடி அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நீடா கான் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், மின்னணு ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அவருக்கு எதிராக வலுவாக இருந்ததால், நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரது செல்போன் மற்றும் உறவினர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப உதவியுடன் அவர் பதுங்கியிருந்த இடத்தை போலீஸார் கண்டறிந்தனர்.
இந்த வழக்கில் இதுவரை டேனிஷ் ஷேக், தௌசிப் அத்தார், ரசா மேமன், ஷாருக் குரேஷி உட்படப் பல ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, பாலியல் புகார்களை விசாரிக்கும் பொறுப்பில் உள்ள 'போஷ்' (POSH) குழுவில் இருந்த அஷ்வின் சைனானி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாகத் தனது உள் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், நீடா கானின் கைது இந்த வழக்கில் மேலும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
