
நெதர்லாந்து சுற்றுலா கப்பலில் ஹான்டாவைரஸ் பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு, ஸ்பெயின் செல்ல காத்திருக்கும் பயணிகள்
நெதர்லாந்து நாட்டுக்குச் சொந்தமான 'எம்.வி ஹோண்டியஸ்' (MV Hondius) எனும் சொகுசு சுற்றுலா கப்பலில் 'ஹான்டாவைரஸ்' (Hantavirus) தொற்று ஏற்பட்டு, அதில் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் அண்டார்டிகா, போக்லாந்து தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கப்பலில் வைரஸ் பரவியதை அடுத்து அதன் பயணத் திட்டம் மாற்றப்பட்டு, தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே (Cape Verde) கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள சுமார் 150 பயணிகள் தங்களது அறைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டு சுகாதார அதிகாரிகள், மனிதர்களிடையே பரவக்கூடிய அரிதான ஒரு வகை ஹான்டாவைரஸ் பாதிப்பைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக, இந்த வைரஸ் எலிகளின் கழிவுகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் என்றாலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது எனத் தெரியவந்துள்ளது. கப்பலில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணிகளில் அந்த கப்பலின் மருத்துவர் உட்பட மூவர் மேல் சிகிச்சைக்காக நெதர்லாந்து நாட்டுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மையத்தின் வேண்டுகோளை ஏற்று, ஸ்பெயினின் கேனரி தீவுகளில் இக்கப்பலை தரையிறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மத்திய அரசு இந்த முடிவை உறுதி செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இது குறித்துக் கூறுகையில், கப்பல் ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது வரை பொதுமக்களுக்கான சுகாதார ஆபத்து குறைவாகவே இருப்பதாகவும் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
