Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 3 நாட்களில் ரூ.11.95 கோடி காணிக்கை வசூல்!
India

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 3 நாட்களில் ரூ.11.95 கோடி காணிக்கை வசூல்!

By MadushanMay 6, 2026

கோடை விடுமுறை மற்றும் மே தினத்தை முன்னொட்டித் தொடர்ச்சியாக வந்த விடுமுறை நாட்களால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் அரசு விடுமுறை என்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதன் காரணமாக, கோயிலுக்கு வெளியே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோடை காலத்தில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த மே 1-ம் தேதி முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 'விஐபி பிரேக் தரிசனம்' முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழலில், எஸ்எஸ்டி (டோக்கன் உள்ள சர்வ தரிசனம்) மூலம் செல்லும் பக்தர்கள் 3 மணி நேரத்திற்குள்ளும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வைத்துள்ளவர்கள் இரண்டரை மணி நேரத்திற்குள்ளும் சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

சாதாரண நாட்களில் வழக்கமாக 65 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வார்கள். ஆனால், இந்த விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 2.45 லட்சம் பக்தர்கள் சுவாமியைத் தரிசித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மே 2-ம் தேதி ஒரே நாளில் 91,005 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.11.95 கோடி வசூலாகியுள்ளது. குறிப்பாக, மே 3-ம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.5.06 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio