
'துருவ நட்சத்திரம்' வெளியீட்டுச் சிக்கல்: இயக்குநர் கௌதம் மேனனுக்கு ஜூலை 31 வரை இறுதி கெடு விதித்த உயர் நீதிமன்றம்
நடிகர் விக்ரம் நடிப்பில், நீண்ட ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருக்கும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் வெளியீட்டுச் சிக்கல் தொடர்பான வழக்கில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. இதுவே கடைசி வாய்ப்பு என்றும், இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி, சியான் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம், பெரும் நிதி நெருக்கடிகளால் பல ஆண்டுகளாக வெளியீட்டிற்குத் தயாராகியும் முடங்கியுள்ளது. இப்படத்திற்கு நிதி உதவி வழங்கிய புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், திரைப்படத்தை வெளியிட கடந்த ஆண்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கை முன்னதாக விசாரித்த தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவில், ஜூன் 15-ஆம் தேதிக்குள் படத்தை வெளியிட அனுமதி வழங்கினார். இந்த உத்தரவை எதிர்த்து நிதியளிப்பாளர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் திலகவதி அடங்கிய அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.
இருப்பினும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை வெளியிட இயலாத சூழலில், கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி கௌதம் மேனன் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, படத்தின் வெளியீட்டிற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இதுவே இறுதியான வாய்ப்பு என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்து, இந்த வழக்கினை முடித்து வைத்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த இறுதி உத்தரவு, பல ஆண்டுகளாகப் படத்திற்காகக் காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
