
இலங்கையில் தீவிரமடையும் இணையவழி நிதி மோசடிகள்: இவ்வருடம் 360க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு
இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு இணையாக, இணையவழி நிதி மோசடிகளும் அதிகரித்துள்ளன. நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 360 இணையம் சார்ந்த நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை, நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் வட்ஸ்அப் போன்ற குறுஞ்செய்தி செயலிகள் வாயிலாகவே இத்தகைய மோசடிகள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுகின்றன. இதுவரை 40க்கும் மேற்பட்ட வட்ஸ்அப் கணக்குகள் ஊடுருவப்பட்டு, பயனர்களின் தொடர்பில் உள்ளவர்களிடம் அவசரத் தேவை எனக் கூறி பணம் பறிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்களை இலக்காகக் கொண்டு 14க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருப்பது பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நம்பமுடியாத பரிசுத் திட்டங்கள், குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதாகக் கூறும் முதலீட்டு ஆசைகள் மற்றும் உடனடி கடன் வழங்கும் செயலிகள் எனப் பல நூதன வடிவங்களில் மோசடியாளர்கள் மக்களை அணுகுகின்றனர். குறிப்பாக, கடன் செயலிகள் மூலம் தனிப்பட்ட தரவுகளைத் திருடி, பின்னர் மக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், இணையவழி பணப் பரிமாற்றங்களின் போது பொதுமக்கள் உச்சக்கட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம் என்றும், வங்கி அட்டை விபரங்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP எண்கள் போன்ற இரகசிய தகவல்களை எக்காரணம் கொண்டும் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் தானா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பயன்படுத்த வேண்டும். அத்துடன், அனைத்து டிஜிட்டல் கணக்குகளுக்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பேணுவதும், ஈரடுக்கு பாதுகாப்பு (Two-Factor Authentication) வசதியைச் செயற்படுத்துவதும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
