
இலங்கையில் 42 பகுதிகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக அறிவிப்பு: 27,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் 42 பகுதிகள் டெங்கு நோய் பரவக்கூடிய அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் 27,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 14 மரணங்கள் பதிவாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்திலேயே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படுகின்றது. மாவட்ட ரீதியான தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் 5,930 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 4,465 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,572 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையுடனான காலநிலை தொடர்வதால், வரும் நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்பதால், சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
