Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

சில்ஹெட் டெஸ்ட்: 437 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் தீவிரம் – மசூத், ரிஸ்வான், சல்மான் அரைசதம்!
Sports

சில்ஹெட் டெஸ்ட்: 437 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் தீவிரம் – மசூத், ரிஸ்வான், சல்மான் அரைசதம்!

By MadushanMay 19, 2026

சில்ஹெட்டில் நடைபெற்று வரும் வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 437 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தீவிரமாக விளையாடி வருகிறது.

இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான ஃபாஸல் 6 ரன்களிலும், அஸன் அவைஸ் 21 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அஸாம் ஆகியோர் அணியை மீட்டெடுக்க போராடினர். ஒருபுறம் ஷான் மசூத் நிதானமாக ஆட, மறுபுறம் பாபர் அஸாம் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய பாபர் அஸாம், 47 ரன்கள் எடுத்திருந்தபோது (52 பந்துகள், 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) டைஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் லித்தன் தாஸிடம் கேட்ச் கொடுத்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். நல்ல ஃபார்மில் இருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவுட்டானதால், அவர் பெரும் விரக்தியுடன் களத்தை விட்டு வெளியேறினார்.

மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஷான் மசூத் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். பின்னர் வந்த சவுத் ஷகீல் 6 ரன்களில் சுருண்டார். நிதானமாக விளையாடி அணியைத் தாங்கிப் பிடித்த ஷான் மசூத், 71 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

தற்போது வரை பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது விக்கெட்டில் சல்மான் ஆகா (52) மற்றும் விக்கெட் கீப்பர் மொஹம்மது ரிஸ்வான் (59) ஆகியோர் தலா அரைசதம் கடந்து, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இன்னும் கணிசமான ரன்கள் தேவைப்படும் நிலையில், இவர்களின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio