Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

உத்திரப் பிரதேசம்: 594 கி.மீ நீள கங்கா எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
India

உத்திரப் பிரதேசம்: 594 கி.மீ நீள கங்கா எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

By MadushanApril 30, 2026

உத்தரப் பிரதேச மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக, 594 கிலோமீட்டர் நீளம் கொண்ட 'கங்கா எக்ஸ்பிரஸ்' விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். சுமார் 36,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த 6 வழிச் சாலை, மாநிலத்தின் 12 முக்கிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர், நாட்டின் மிக நீளமான பசுமைவழி விரைவுச் சாலைகளில் ஒன்றான இத்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மீரட்டில் தொடங்கி பிரயாக்ராஜ் வரை நீளும் இந்த விரைவுச் சாலை, பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10 முதல் 12 மணி நேரமாக இருந்த மீரட் - பிரயாக்ராஜ் இடையிலான பயண நேரம், தற்போது 6 முதல் 8 மணி நேரமாக குறைந்துள்ளது. வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்தச் சாலையில், அவசர காலங்களில் போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஷாஜஹான்பூர் பகுதியில் 3.5 கி.மீ தூரத்திற்கு விமான ஓடுதளமும் (Airstrip) பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பெரும் பகுதியை (நான்கில் மூன்று பங்கு) அதானி குழுமம் கட்டமைத்துள்ளது. தொழில் வளர்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த 6 வழிச் சாலையை, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப 8 வழிச் சாலையாக விரிவுபடுத்தும் வசதியும் உள்ளது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, "ஐந்தாண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த விரைவுச் சாலை, தற்போதைய அரசின் வேகமான செயல்பாட்டிற்குச் சான்றாகும். இது போக்குவரத்து மேம்பாட்டோடு மட்டுமன்றி, ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசத்தின் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio