
இலங்கையில் 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது: கட்டிட உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், குடிவரவு விதிகளை மீறியமை மற்றும் சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 628 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, வியட்நாம், சீனா, மியான்மார், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கறுவாத்தோட்டம், கல்கிஸ்ஸை, பொத்தல, சிலாபம் மற்றும் கொஸ்வத்தை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரதானமாக வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலக இடங்களை மையமாகக் கொண்டே தமது சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கட்டிட உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர், தமது சொத்துக்கள் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், அதன் உரிமையாளர்களும் பாரதூரமான சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வீடுகள் அல்லது அலுவலகங்களை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு வழங்கும் போது, அது குறித்த முழுமையான விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் என அவர் வலியுறுத்தினார்.
முறையான சோதனைகள் மற்றும் பதிவுகள் இன்றி இடங்களை வாடகைக்கு விடும்போது, அங்கு ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றால் கட்டிட உரிமையாளர்களும் அந்த குற்றத்திற்கு உடந்தையாகக் கருதப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். எனவே, இத்தகைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற சட்டச் சிக்கல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பொதுமக்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
