
செம்மணி மனிதப் புதைகுழி: 69 நாட்களில் 272 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
நாட்டின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த 69 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 272 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடம்பெற்ற 15ஆவது நாளான நேற்று புதன்கிழமை (03), குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், நேற்று மட்டும் ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, ஆறு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் இதுவரை 34 மனித எலும்புக்கூடுகளும், நேற்று இரண்டு எலும்புக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்குவதாக அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
இடைநிறுத்தப்பட்ட அகழ்வாய்வும் நிதி ஒதுக்கீடும்
மனிதப் புதைகுழியின் மேலதிக அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து, சுமார் ஏழு மாத கால இடைவெளிக்குப் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின.
இதற்கு முன்னர், மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ச்சியாக 12 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அகழ்வாய்வுப் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக மே 9 சனிக்கிழமை அன்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அப்போது 261 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, மூன்று வார கால ஓய்வின் பின்னர், இதன் அகழ்வாய்வுப் பணிகள் மீண்டும் கடந்த ஜூன் முதலாம் திகதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தொடரும் அகழ்வாய்வுப் பணிகள்
ஜூன் முதலாம் திகதி மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து ஒரு எலும்புக்கூடும், ஜூன் 2 ஆம் திகதி மேலும் எட்டு எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. இதில் விசேட அம்சமாக, ஒரு எலும்புக்கூடு மற்றுமொரு எலும்புக்கூட்டின் மீது அடுக்கப்பட்டவாறு காணப்பட்டதாக அகழ்வாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பின்னணி: நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தச் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் முதன் முதலாக 2025 மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, 100 இற்கும் மேற்பட்ட பிற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றமை, அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
