Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

‘ஜனநாயகன்’ படக் கசிவு: அமேசான் பிரைம் ஒப்பந்தம் ரத்து - ரூ.70 கோடி நஷ்டத்தில் படக்குழு?
Entertainment

‘ஜனநாயகன்’ படக் கசிவு: அமேசான் பிரைம் ஒப்பந்தம் ரத்து - ரூ.70 கோடி நஷ்டத்தில் படக்குழு?

By MadushanMay 4, 2026

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இணையதளத்தில் படம் கசிந்த விவகாரம் தயாரிப்பு தரப்புக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இப்படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி எதிர்பாராத விதமாக இப்படம் சில இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இது குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர்.

திரையரங்க வெளியீட்டிற்கு முன்பே படம் இணையத்தில் கசிந்தது ‘ஜனநாயகன்’ படத்தின் வணிகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. முன்னதாக, இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோ சுமார் ரூ.120 கோடிக்கு வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இணையத்தில் படம் கசிந்த பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக, அமேசான் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் சூழலால், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதற்கு புதிய நிறுவனங்கள் முன்வந்தாலும், அவை மிகக் குறைந்த விலையையே வழங்க முன்வருகின்றன. குறிப்பாக, சுமார் ரூ.50 கோடி அளவிலேயே விலை கேட்கப்படுவதால், படக்குழுவினருக்கு ஏறத்தாழ ரூ.70 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில், வரும் மே 7-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தணிக்கை சிக்கல் மற்றும் இணைய கசிவு என அடுத்தடுத்த சவால்களைத் தாண்டி ‘ஜனநாயகன்’ திரைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio