
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கைக்கு நடிகர் விஷால் பாராட்டு!
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பதவியேற்ற கையோடு முதல்வர் எடுத்துள்ள இந்த மக்கள் நலன் சார்ந்த முடிவுக்குப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வரின் இந்த அறிவிப்பினை மனதாரப் பாராட்டியுள்ள நடிகர் விஷால், இது குறித்து தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "தமிழக முதல்வர் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் அரசாங்கம் இன்று எடுத்துள்ள முடிவு ஒரு மிகப்பெரிய சாதனை. குறிப்பாக, பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பல பெண் குழந்தைகள் இத்தகைய மதுபானக் கடைகளைக் கடந்துதான் கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையை யாராவது மாற்ற மாட்டார்களா என்று நான் பலமுறை யோசித்ததுண்டு. தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளதை எண்ணி உங்களுக்கு ஒரு 'சல்யூட்' வைக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 20,000 கோடிக்கும் மேலாக வருமானம் வரும் என்பது தெரிந்தும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது பாராட்டுக்குரியது என விஷால் குறிப்பிட்டுள்ளார். இது பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், குறிப்பாக ஆர்.கே. நகரில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். அங்கு ஒரு மாணவி, தினமும் மதுக்கடையைக் கடந்துதான் வீட்டிற்குச் செல்ல வேண்டிய சூழலில் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதைச் சுட்டிக்காட்டிய விஷால், அந்த மாணவியைப் போன்ற எண்ணற்ற பொதுமக்களின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். "மது எனும் பெரும் தீமையிலிருந்து நிரந்தர விடுதலை அளிக்கும் ஒரு சிறப்பான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது" எனத் தனது பதிவில் விஷால் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
