
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: 2 வார கெடு விதிப்பு!
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இயங்கி வரும் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக் குறிப்பின்படி, பொதுமக்கள் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை ஆய்வு செய்ய முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கீழ் தற்போது மொத்தம் 4,765 கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆய்வின் முடிவில், குறிப்பிட்ட விதிமீறல் தூரத்திற்குள் மொத்தம் 717 கடைகள் செயல்படுவது கண்டறியப்பட்டது. இதில் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களை ஒட்டி அமைந்துள்ள 255 கடைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து கடைகளையும் அடுத்த 14 நாட்களுக்குள் நிரந்தரமாக மூடுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழக அரசு ஏற்கனவே 500 மதுக்கடைகளை மூடியிருந்த நிலையில், தற்போது மேலும் 717 கடைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த சமூக நலன் சார்ந்த முடிவிற்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
