
பேட் கம்மின்ஸைத் தக்கவைக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி: ரூ. 82 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தம்!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவருமான பேட் கம்மின்ஸை சர்வதேச டி20 லீக் போட்டிகளின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊதிய ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரூ. 20.8 கோடிக்கு விளையாடி வரும் கம்மின்ஸ், அண்மையில் காயம் காரணமாகச் சில போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அவரது தலைமையிலான ஹைதராபாத் அணி 11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்தச் சூழலில், சர்வதேச லீக் அணிகள் சில, முன்னணி வீரர்களைத் தங்களது நிறுவனத்தின் கீழ் இயங்கும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் மட்டும் விளையாட வைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, கம்மின்ஸுக்கு ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 58 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்க ஒரு முன்னணி ஐபிஎல் நிறுவனம் முன்வந்ததாகத் தகவல் வெளியானது. இந்த ஒப்பந்தத்தின்படி, அவர் தேசிய அணியிலிருந்து விலகி, அந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் தொடர்களில் மட்டுமே விளையாட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சவால்களை முறியடிக்கவும், முன்னணி வீரர்கள் தேசிய அணியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு வியூகத்தை வகுத்துள்ளது. இதன்படி, பேட் கம்மின்ஸிற்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 4 மில்லியன் அவுஸ்திரேலிய டாலர் மதிப்பிலான (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 82 கோடி) ஒரு பிரம்மாண்ட ஒப்பந்தத்தை வழங்க முன்வந்துள்ளது. இந்தத் தொகை அவர் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையைச் சார்ந்தது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் விளையாடும் போட்டிகளுக்குத் தனித்தனியாக ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜேம்ஸ் ஆல்சாப் கூறுகையில், "பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களுக்கு உலக அளவில் பெரும் தேவை உள்ளது. எனவே, அவர்களை அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் விளையாட வைப்பதே எங்களது முக்கிய முன்னுரிமையாகும்," எனத் தெரிவித்தார்.
அடுத்த 12 மாத காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணி மிகவும் பிஸியான கால அட்டவணையைக் கொண்டுள்ளது. வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடர்கள், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்கள் என மொத்தம் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் அடங்கும் என்பதால், கம்மின்ஸ் போன்ற முக்கிய வீரர்களின் பங்களிப்பு அந்த அணிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
