
கனகராயன்குளம் A9 வீதியில் கோர விபத்து: யாழ்ப்பாண முன்னாள் அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு - கார் ஓட்டுநர் கைது
வவுனியா, கனகராயன்குளம் A9 பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில், யாழ்ப்பாணத்தின் முன்னாள் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரின் மகன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கனகராயன்குளம், பெரியகுளம் சந்திக்கு அருகே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த கோர மோதலில், மோட்டார் சைக்கிளில் பயணித்த கனகராயன்குளத்தைச் சேர்ந்த அற்புதராஜா தர்சன் (வயது 30) மற்றும் செல்வரத்தினம் பிரசாந்தன் (வயது 25) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான அற்புதராஜா தர்சன், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரின் புதல்வன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்துக்குள்ளான காரின் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதியுள்ளது. எனினும், அதில் பயணித்தவர்கள் காயங்களின்றி உயிர் தப்பியதாக அறியப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த கனகராயன்குளம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர். உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக சொகுசு காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
