
கனடாவின் Aurora நகரில் 55 வயது நபர் கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு
கனடாவின் Aurora நகரில் 55 வயதான நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் மீது இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த ஜூன் 10 ஆம் திகதி, Yonge Street-க்கு கிழக்கே உள்ள Wellington Street East மற்றும் Walton Road சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது. அன்று பிற்பகல் சுமார் 2:45 மணியளவில், குறித்த வீட்டில் ஏற்பட்ட தகராறு குறித்து கிடைத்த தகவலின் பேரில் York பிராந்திய காவல்துறையினர் அங்கு விரைந்தனர். சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் காணப்பட்ட ஒருவரை மீட்டனர். எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் நிரந்தர முகவரியற்ற, 55 வயதான David Gosse என ஜூன் 12 அன்று அடையாளம் காணப்பட்டார். பிரேதப் பரிசோதனையின் போது, 'blunt force trauma' காரணமாக, அதாவது மழுங்கிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்தது உறுதியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக, Alliston நகரைச் சேர்ந்த 44 வயதான James Montgomery, நிரந்தர முகவரியற்ற 31 வயதான Craig Wilson, Georgina-வைச் சேர்ந்த 36 வயதான Jaymie White, மற்றும் Aurora நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தினரான 58 வயதான Fabio Faganello, 54 வயதான Maria Faganello, 29 வயதான Bianka Faganello ஆகிய ஆறு பேர் மீதும் இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது அப்பகுதியில் பாதுகாப்பு காணொளிப் பதிவுகளைக் கொண்டவர்கள் உடனடியாக முன்வந்து தங்களுக்கு உதவுமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
