
இலங்கை - இந்திய உறவில் மற்றுமொரு மைல்கல்: கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது 'INS ஐராவத்'
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' கொள்கை மற்றும் 'SAGAR' தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் முகமாக, இந்திய கடற்படைக்குச் சொந்தமான 'INS ஐராவத்' போர்க்கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த 'INS ஐராவத்' கப்பலையும் அதன் குழுவினரையும், இலங்கை கடற்படை தனது கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்றது. 'ஷர்துல்' வகையைச் சேர்ந்த இந்த பீரங்கிப் படகு தாங்கிக் கப்பலுக்கு, கமாண்டர் ஐ.பி. பாட்டீல் தலைமை தாங்குகிறார். துருப்புக்கள், வாகனங்கள் மற்றும் தளவாடங்களைக் காவிச் செல்லும் திறன் கொண்டதாக இக்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் தொழில்சார் கலந்துரையாடல்கள், கூட்டுப் பயிற்சிகள் மற்றும் சினேகபூர்வ விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடவுள்ளனர். இத்தகைய செயற்பாடுகள், இருதரப்பு கடற்படைகளுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும், ஒருங்கிணைந்து செயற்படும் திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, 'INS ஐராவத்' கப்பல் ஜூன் 03 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
