
பிரித்தானியப் பிரதமர் Keir Starmer தொடர்புடைய சொத்துகளுக்கு தீ வைப்பு: சதி வழக்கில் இருவர் குற்றவாளிகள் என London நீதிமன்றம் தீர்ப்பு
பிரித்தானியப் பிரதமர் Keir Starmer தொடர்புடைய சொத்துகளுக்குத் தீ வைக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக இரண்டு பேரை London நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. ரஷ்ய மொழி பேசும் மர்ம நபர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம், Keir Starmer பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் காலி செய்த வீடு, அவர் முன்னர் பங்குதாரராக இருந்த ஒரு குடியிருப்பு மற்றும் அவரது பழைய Toyota கார் ஆகியவற்றிற்குத் தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சொத்துகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த வழக்கில், உக்ரைனைச் சேர்ந்த Roman Lavrynovych (22) மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த Stanislav Karpiuk (27) ஆகியோர் சதித்திட்டம் தீட்டி சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றொருவரான Petro Bochyniuk (35) இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கில் தீ வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் Lavrynovych குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், 'El Money' என்ற பெயரில் இயங்கிய ரஷ்ய மொழி பேசும் நபர், Telegram செயலி மூலம் Lavrynovych-ஐத் தொடர்புகொண்டு, தாக்குதல்களை நடத்தப் பணம் தருவதாக ஆசை காட்டியது தெரியவந்தது. தாக்குதல்களை வீடியோ எடுத்து அனுப்பினால், அது இணையத்தில் பரப்பப்பட்டு தாக்குதலின் நோக்கம் நிறைவேறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'El Money' என்பவரின் உண்மையான அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. இலக்குகள் குறித்த விரிவான தகவல்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைத் தயாரிப்பது மற்றும் காவல்துறையிடம் சிக்காமல் தப்பிப்பது போன்ற வழிமுறைகளை அவர் Lavrynovych-க்கு வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர், Commander Helen Flanagan கூறுகையில், "இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு விரோத நாட்டின் சதி இருப்பதற்கான நேரடி ஆதாரம் இல்லை. ஏனெனில் 'El Money' யாருக்காக வேலை செய்கிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும், பிரதமரை அச்சுறுத்துவதும், பிரிட்டனைத் தாக்குவதும், மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதுமே இதன் நோக்கமாக இருந்துள்ளது," என்றார்.
தன் தந்தை மருத்துவச் செலவுக்காகப் பணம் தேவைப்பட்டதால் இந்தச் செயலில் ஈடுபட்டதாக Lavrynovych ஒப்புக்கொண்டார். 3,000 பவுண்டுகள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சிக்காகத் தீ வைத்ததாகவும், ஆனால் 'El Money' தன்னை மிரட்டியதால் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.
தீ வைத்த பிறகு, 'பணம் அனுப்புகிறேன்' என உறுதியளித்த 'El Money', ஒருவேளை காவல்துறையிடம் பிடிபட்டால் 'geranium' என்ற ரகசியக் குறியீட்டு வார்த்தையை அனுப்புமாறு Lavrynovych-இடம் கூறியுள்ளார். இந்த செய்தி கிடைத்த சிறிது நேரத்திலேயே அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மூன்று தீ வைப்புச் சம்பவங்களுக்கும் அவருக்குப் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் Karpiuk ஒரு இடைத்தரகராகச் செயல்பட்டதும், Lavrynovych பணம் பெறுவதற்காகத் தீ வைக்கும் காட்சிகளை வீடியோ எடுக்க Bochyniuk நியமிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. Keir Starmer-இன் மைத்துனி, தனது 9 வயது மகளுடன் அந்த வீட்டில் இருந்தபோது, பெரும் சத்தத்தைக் கேட்டு எழுந்ததாகவும், படிக்கட்டுகளில் புகை சூழ்ந்ததால் சுவாசிக்கச் சிரமப்பட்டதாகவும், தனது மகள் மிகவும் பயந்துவிட்டதாகவும் சாட்சியமளித்தார்.
