
தெற்கு Ontario நகைக்கடை கொள்ளை: 8 பேர் கைது, 50 வழக்குகள் பதிவு
தெற்கு Ontario பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட "smash-and-grab" வகை கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 8 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக Halton Regional Police தெரிவித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் Burlington, Guelph, Brantford, Waterloo மற்றும் St. Catharines ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்கள் மீது மொத்தம் 50 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் கொள்ளைக் கும்பல் வாரக்கணக்கில் GTA பகுதிகளில் உள்ள சமூகங்களைக் குறிவைத்துச் செயல்பட்டு வந்ததாக Halton Regional Police Chief Stephen Tanner தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் வணிக வளாகங்களில் பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டும். சட்டத்தை மதிக்காமல் செயல்பட்ட இவர்களில் நால்வர், ஏற்கனவே வேறு வழக்குகளில் பிணையில் இருந்தபோது மீண்டும் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகையவர்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவதில் காவல்துறை உறுதியாக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவங்களின் போது திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் "cloned licence plates" (போலி வாகன எண்கள்) பயன்படுத்தப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை வெளியிட்ட வீடியோ ஆதாரங்களில், முகமூடி அணிந்த நபர்கள் நகைக்கடைகளின் கண்ணாடிப் பெட்டிகளை உடைத்து நகைகளைத் திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவங்கள் எதிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில், கொள்ளையர்கள் வாகனத்தை நேரடியாகக் கடைக்குள் மோதி நுழைத்ததில் கட்டிடத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள போதிலும், இதில் எவருக்கும் காயம் ஏற்படாதது பெரிய ஆறுதல் என Superintendent Dave Costantini தெரிவித்துள்ளார். தற்போது கொள்ளை, முகத்தை மறைத்துக் குற்றத்தில் ஈடுபடுதல் மற்றும் பிணை விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கும்பல் மேலும் பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், புலனாய்வுத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் கூடுதல் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் Halton Regional Police தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
