Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

717 டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக அரசின் முடிவு நல்முடிவு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
India

717 டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக அரசின் முடிவு நல்முடிவு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

By MadushanMay 20, 2026

தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடும் அரசின் முடிவைப் பாராட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த முடிவை எதிர்த்து இட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 12ஆம் தேதி தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகள் இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்திக்குறிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை ஆர்.ஏ.புரம் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் நிறுவனத்திற்குத் தங்களது கடைகளை வாடகைக்கு விட்டிருந்த அடையாரைச் சேர்ந்த சரவணன் மற்றும் மதியரசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் நிறுவனத்திற்குத் தங்களது கடைகளை வாடகைக்கு வழங்கி, 11 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தை முறைப்படி புதுப்பித்து வந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், அந்த இடங்களை மதுபானக் கடைகளாக மாற்றுவதற்காகப் பெருந்தொகை செலவு செய்து உள் அலங்காரப் பணிகளை மேற்கொண்டதாகவும், தற்போது கடைகளை திடீரென மூடுவதால் தங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து அந்த மனுவில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே கடைகள் அமைக்கக் கூடாது என்று உள்ள நிலையில், 500 மீட்டர் தூரம் எனத் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன், மதுவிலக்குச் சட்ட விதிகளின்படி அனைத்து அறிவிப்புகளும் அரசிதழில் (Gazette) வெளியிடப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் கையெழுத்தில்லாமல் வெளியான இந்தச் செய்திக் குறிப்பிற்குத் தடை விதித்து, அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முந்தைய ஆட்சிக் காலத்தில் இடத்தை வாடகைக்குக் கொடுத்தவர்களுக்கு உரிய தொகையை டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாகத் திருப்பி அளித்துவிடும் என்று உறுதியளித்தார். மேலும், அரசின் புதிய கொள்கை முடிவை எதிர்த்து இட உரிமையாளர்கள் வழக்குத் தொடர சட்டப்படி இடமில்லை என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு ஒரு மிகச்சிறந்த நல்முடிவு என்று பாராட்டினார். மேலும், முதலமைச்சரின் இந்தக் கொள்கை முடிவுக்கு டாஸ்மாக் நிறுவனம் முழுமையாகக் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அரசின் கொள்கை முடிவு குறித்துக் கேள்வி எழுப்ப இட உரிமையாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி, அவர்கள் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio