
Brockville நகரில் மூவர் உயிரிழப்பு: 17 வயது இளைஞர் கைது
கனடாவின் Ontario மாகாணத்தில் உள்ள Brockville நகரில், நேற்று வியாழக்கிழமை ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 17 வயது இளைஞர் ஒருவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார், அங்கு காணப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இது ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் என உறுதிப்படுத்தினர்.
Cartier Court பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் மூவர் உயிரிழந்துள்ளதாகக் காலை 11:30 மணியளவில் 911 அவசர அழைப்பு வந்ததாகப் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய போலிஸாருக்குக் கிடைத்த கூடுதல் தகவலின் அடிப்படையில், நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள மற்றொரு முகவரியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அந்த முகவரியில் வைத்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் Brockville பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவரைப் போலிஸார் காவலில் எடுத்தனர். அந்த இளைஞர் மீது மூன்று முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் போலிஸ் அதிகாரியைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல என்றும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே முன்பே அறிமுகம் இருந்ததாகவும் போலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் போலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விசாரணை மிகவும் சிக்கலானது மற்றும் உணர்வுபூர்வமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், அந்தச் சமூகத்திற்கும் இது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை நாங்கள் உணர்கிறோம். போலிஸாரின் விசாரணைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று வெள்ளிக்கிழமை பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். Youth Criminal Justice Act சட்டத்தின் கீழ் அந்த இளைஞரின் அடையாளம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
