
California: பட்டமளிப்பு விழா கொண்டாட்டம் துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது - 18 வயது இளைஞர் பலி, மூவர் கைது
அமெரிக்காவின் California மாகாணத்தில் உள்ள Fairfield உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகு அரங்கேறிய துப்பாக்கிச்சூட்டில், 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் 11 வயது சிறுவன் உட்பட மேலும் மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Fairfield காவல்துறை உறுதி செய்துள்ளது.
San Francisco நகருக்கு வடகிழக்கே அமைந்துள்ள Fairfield உயர்நிலைப் பள்ளியில், Sem Yeto உயர்நிலைப் பள்ளிக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா நிறைவடைந்ததும், மாணவர்களும் பெற்றோர்களும் வாகன நிறுத்துமிடத்தில் கூடியிருந்தபோது இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், 18 வயதான Damarcus Armstrong என்பவர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதே தாக்குதலில் 20 மற்றும் 25 வயதுடைய இருவர், மற்றும் 11 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே துரிதமாகச் செயல்பட்ட Fairfield காவல்துறை, சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களைக் கைது செய்துள்ளது. அவர்களில் 19 வயதான Kamaria Strange, 20 வயதான Creaton D. Ervin மற்றும் 17 வயதுடைய மைனர் ஒருவர் அடங்குவர். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பட்டமளிப்பு விழா முடிந்த மகிழ்ச்சியில் அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், மக்கள் பீதியில் அலறியடித்து ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர் ஒருவர், மக்களின் அலறல் சத்தம் நெஞ்சை உலுக்குவதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் வாழ்வில் மறக்க முடியாத கொண்டாட்ட நாள், வன்முறையால் சோகத்தில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
