Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

Laos குகை சம்பவம்: ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் உயிருடன் மீட்பு!
World

Laos குகை சம்பவம்: ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் உயிருடன் மீட்பு!

By MadushanMay 27, 2026

Laos நாட்டின் Xaisomboun மாகாணத்தில், கனமழை வெள்ளத்தால் குகை ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த ஏழு கிராமவாசிகள், வெற்றிகரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். Laos மற்றும் Thai நாடுகளின் மீட்புக்குழுவினர் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த மீட்புப் பணி சாத்தியமாகியுள்ளது.

Longcheng மாவட்டத்தில் உள்ள Tham Nam Non குகைக்குள் கடந்த மே 19 அன்று இந்த ஏழு பேரும் சென்றுள்ளனர். அவர்கள் குகைக்குள் இருந்த சமயத்தில், எதிர்பாராதவிதமாகப் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு குகையின் நுழைவாயிலை மூடியதால், அவர்களால் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

தலைநகர் Vientiane-இலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த குகை, கரடுமுரடான மலைப்பகுதியில் அமைந்துள்ளது. தொடர் மழையும், கடினமான நில அமைப்பும் மீட்புப் பணிகளுக்குப் பெரும் தடையாக இருந்தன. மேலும், குகையின் நுழைவாயில் மிகவும் செங்குத்தாகவும், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு குறுகலாகவும் இருந்தது மீட்புக் குழுவினருக்கு சவாலை அதிகரித்தது.

இந்தப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், Thailand-ஐச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட சர்வதேச மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு Thailand குகை விபத்தில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை மீட்ட குழுவும் இந்தப் பணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சிக்கியிருந்த ஏழு பேரும் உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அனைவரும் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டனர்.

மீட்கப்பட்ட எழுவரும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல நாட்கள் உணவின்றி இருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் குகைக்குள் சென்றதற்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தங்கம் தேடும் நோக்கில் அவர்கள் குகைக்குள் சென்றிருக்கலாம் என்று உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Boom Tamil
Live NowBoom Tamil Radio