
Montreal-ஐ தாக்கிய பயங்கர புயல்: காற்றில் பறந்த விளையாட்டு சாதனம் - குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்
Canada-வின் Montreal பெருநகரப் பகுதியைத் தாக்கிய பயங்கர இடியுடன் கூடிய புயல், அங்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலின்போது, பூங்கா ஒன்றில் காற்றில் இயங்கும் விளையாட்டு சாதனம் தூக்கி வீசப்பட்டதில், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
LaSalle பகுதியில் உள்ள Ouellette பூங்காவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்றினால், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த காற்றடைக்கப்பட்ட பெரிய விளையாட்டு சாதனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காற்றில் பறந்தது. இதைத் தொடர்ந்து, உடனடியாக மாலை 4:25 மணியளவில் Urgences-Santé அவசர சேவை மையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், காயமடைந்த 11 பேருக்கு முதலுதவி அளித்தனர். அவர்களில், பலத்த காயமடைந்த இரண்டு குழந்தைகள் மற்றும் நான்கு பெரியவர்கள் என மொத்தம் ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில், ஒரு குழந்தையின் நிலை ஆரம்பத்தில் கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது அவர் நலமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து LaSalle நகர நிர்வாகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதேபோல், Montreal-ன் Mercier-Hochelaga-Maisonneuve பகுதியில், Leclaire தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. Adam மற்றும் Sainte-Catherine தெருக்களுக்கு இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை, எனினும் வாகனம் பலத்த சேதமடைந்தது.
புயல் வருவதற்கு முன்பாக, Environment and Climate Change Canada (ECCC) அமைப்பு, Montreal, Laval, Longueuil-Varennes மற்றும் Châteauguay-La Prairie உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிதீவிர புயல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த புயலின்போது பலத்த காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்றும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
