
Montreal-ல் பதற்றம்: பாதசாரிகள் மீது காரை ஏற்ற முயற்சி - காவல்துறை துப்பாக்கிச்சூடு, ஒருவர் கைது
Canada-வின் Montreal நகரில், பாதசாரிகள் மீது காரை ஏற்ற முயன்ற கும்பலை நோக்கி காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Angrignon பூங்கா அருகே சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில், காவல்துறையின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், Angrignon பூங்காப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக Montreal காவல்துறையினருக்கு (SPVM) அவசரத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், Trinitaires Boulevard வீதியில் கார் ஒன்று பாதசாரிகளை நோக்கி வேகமாகச் செல்வதைக் கண்டனர்.
வாகனத்தை நிறுத்துமாறு காவல்துறையினர் எச்சரித்தும், அது நிற்காமல் சென்றதால், அதன் மீது குறைந்தது ஒரு முறையாவது துப்பாக்கியால் சுட்டதாக Montreal காவல்துறை பேச்சாளர் Manuel Couture உறுதிப்படுத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும்.
காரில் மூன்று பேர் இருந்த நிலையில், காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டான். காரில் இருந்த மற்ற இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
தப்பியோடிய இருவரையும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
