
Montreal தீ விபத்து: 3 லாரிகள் எரிந்து சாம்பல் - 10 வாகனங்கள் சேதம்.
Montreal நகரின் Saint-Laurent பகுதியில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மூன்று லாரிகள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. மேலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Saint François Road மற்றும் Donahue Street சந்திப்பில் அமைந்துள்ள அந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக இன்று அதிகாலை 1:30 மணியளவில் Montreal Police (SPVM) கட்டுப்பாட்டு அறைக்கு 911 அவசர அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
"காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, மூன்று பெரிய லாரிகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. தீயணைப்பு வீரர்கள் அவற்றைக் கட்டுப்படுத்தப் போராடினர். எனினும், தீயின் வீரியத்தால் அருகில் இருந்த மேலும் 10 வாகனங்கள் கணிசமாகச் சேதமடைந்தன," என்று மொன்ட்ரியல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் Manuel Couture தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், தீ விபத்து நடந்த இடத்தில் தீப்பற்ற வைக்கக்கூடிய மர்மப் பொருட்கள் (Incendiary materials) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் இது திட்டமிட்ட சதிச் செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையின் பாதுகாப்புக் வளையத்திற்குள் (Security perimeter) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக மொன்ட்ரியல் காவல்துறையின் தீவைப்பு தடுப்புப் பிரிவிடம் (Arson squad) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
