Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

PSL டி20 மகுடம் சூடியது பெஷாவர் ஜல்மி: இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
Sports

PSL டி20 மகுடம் சூடியது பெஷாவர் ஜல்மி: இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!

By MadushanMay 4, 2026

லாகூரில் நேற்று நடைபெற்ற பிஎஸ்எல் (PSL) டி20 தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், ஐதராபாத் கிங்ஸ்மென் அணியை வீழ்த்தி பெஷாவர் ஜல்மி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் கிங்ஸ்மென் அணி, பெஷாவர் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 50 பந்துகளில் 54 ஓட்டங்களை (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) சேர்த்தார். பெஷாவர் அணி சார்பாக ஆரோன் ஹார்டி மிரட்டலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், நஹித் ராணா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

130 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெஷாவர் ஜல்மி அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி ஆட்டக்காரர் மொஹம்மது ஹாரிஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேற, நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான பாபர் அஸாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸும் 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பெஷாவர் அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது.

இருப்பினும், அதன் பின்னர் இணைந்த ஆரோன் ஹார்டி மற்றும் அப்துல் சமாத் கூட்டணி அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தினால் பெஷாவர் ஜல்மி அணி 15.2 ஓவர்களிலேயே 130 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஹார்டி 39 பந்துகளில் 56 ஓட்டங்களையும் (9 பவுண்டரிகள்), அப்துல் சமாத் 34 பந்துகளில் 48 ஓட்டங்களையும் (4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினர். ஐதராபாத் அணி சார்பில் மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளையும், ஆகிப் ஜாவேத் மற்றும் ஹுசைன் ஷா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய போதிலும் அவர்களால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

Boom Tamil
Live NowBoom Tamil Radio